உள்ளூர் செய்திகள்

கைதான வசந்தகுமார்,  கொலை செய்யப்பட்ட சரோஜா.

சிறுமுகை மூதாட்டி கொலையில் கல்லூரி மாணவர் கைது- போலீசார் விசாரணை

Published On 2022-12-26 15:15 IST   |   Update On 2022-12-26 15:15:00 IST
  • வசந்தகுமாருக்கு ஆன்லைன் விளையாடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
  • நகைகளை அடகு வைத்த பணத்தை அவர் ஆன்லைன் விளையாட பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகையன்(63). விவசாயி. இவரது மனைவி சரோஜா(55).

கடந்த 21-ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்தை அறுத்து படுகொலை செய்ப்பட்டார். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த சில நகைகளும் மாயமாகி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளை யம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேளாங்கண்ணி உதய ரேகா, நித்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வ நாயகம், பாண்டியராஜன், சுல்தான் இப்ராகிம், ஆனந்த குமார்,மற்றும் போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(19) என்ற கல்லூரி மாணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. வசந்தகுமார் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் சிறுமுகை தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் மூதாட்டியை கொன்று நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

வசந்தகுமாரின் தாயார் தையல் தைத்து கொடுத்து வருகிறார். இவரிடம் இறந்த சரோஜா துணிகளை தைப்பதற்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர் துணிகளை வசந்தகுமார் எடுத்து சென்று மூதாட்டியிடம் பணம் வாங்கி வருவார். அப்போது மூதாட்டி தனியாக இருப்பதையும், வீட்டில் நகை இருப்பதையும் வாலிபர் அறிந்தார். இதனால் அதனை எடுக்க வாலிபர் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று வசந்தகுமார் பாட்டியிடம் பணம் வாங்குவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாலிபர், மூதாட்டியை கத்தியால் குத்தி கொன்று விட்டு, வீட்டில் இருந்த 14 பவுன் நகையை திருடி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வசந்தகுமார் நகையை வீரபாண்டியில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

வசந்தகுமாருக்கு ஆன்லைன் விளையாடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகைகளை அடகு வைத்த பணத்தை அவர் ஆன்லைன் விளையாட பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News