உள்ளூர் செய்திகள்

அண்ணா காய்கறி மார்க்கெட் விவகாரத்தில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்-வியாபாரிகள் கோரிக்கை

Published On 2023-05-22 09:53 GMT   |   Update On 2023-05-22 09:53 GMT
  • கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
  • 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.

கோவை, மே.22-

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாடசாமி, செயலாளர் கனகராஜ், தலைமை பொருளாளர் அப்துல் சமது ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனிடைய கோவை மாநகராட்சியால் பொது ஏலத்தில் விடப்படும் கடைகளை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.

காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற வியாபாரங்கள் செய்து வருகிறோம். இதில் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.

இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.

எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பா ளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News