வகுரம்பட்டி பஞ்சாயத்தில் தார் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்த காட்சி.
நாமக்கல் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
- வகுரம்பட்டி பஞ்சாயத்திற்கு ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி பஞ்சாயத்திற்கு ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வகுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.4.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.18 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி 2-வது தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பணிகள் தரமாக உள்ளதா என சோதனை செய்து பார்த்தார்.
தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.72 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி சமத்துவ மயானத்தில் மயான மேடை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், சிங்கிலிப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், ரூ.5.72 லட்சம் மதிப்பீட்டில் சிங்கிலிபட்டியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால், ரூ.12.61 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் நேதாஜி நகரில் 15-வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.92 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.க்கள் ஜெயக்குமார், பாஸ்கர், பஞ்சாயத்து தலைவர் ராஜாரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.