பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த அலுவலக கோப்புகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
- அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு.
- மதிய உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
அம்மாபேட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் பூண்டி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகள் குறித்தும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சி குறித்தும், பூண்டி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் குறித்தும், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கூத்தரசன், முகமது அமானுல்லா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.