கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணிக்காக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற போது எடுத்த படம்.
ஆறுமுகநேரி பகுதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று கலெக்டர் கள ஆய்வு
- ஆறுமுகநேரி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது.
- நவீன எந்திரங்கள் மூலம் குப்பையை அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு குப்பை மலை போல் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
குப்பை அகற்ற நடவடிக்கை
இந்த நிலையில் அங்கிருந்து குப்பையை அகற்ற தற்போதைய பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது.இதற்காக நவீன எந்திரங்கள் மூலம் குப்பையை அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே வேறு இடத்தில் புதிதாக குப்பைக் கிடங்கு அமைக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கான இடத்தை தேர்வு செய்ய அவர் நேற்று மாலை ஆறுமுகநேரிக்கு வருகை தந்தார். இந்தகள ஆய்வு பணியின் போது அவருடன் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதனும் வந்திருந்தார். கலெக்டரை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். வார்டு கவுன்சிலர்கள் வெங்க டேசன், ஆறுமுகநயினார், மாரியம்மாள், ரமா, புனிதா, தீபா, புனிதா சேகர், தயாவதி, ஜெயராணி, மரிய நிர்மலா தேவி, சகாயரமணி, ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற கலெக்டர்
அப்போது கொட்டமடை காடு பகுதியில் உள்ள இடத்தை பார்வையிட புறப்பட்டபோது அந்த வழியில் பாதை பழுதடைந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி அதனை ஓட்டியபடி கலெக்டர் செந்தில் ராஜ் அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொட்டமடை காடு பகுதிக்கு சென்று ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வி.ஏ.ஓ வை அமர வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில் ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிக்கான குப்பை கிடங்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காயல் பட்டினம் கடையக்குடி பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது திருச்செந்தூர் துணை கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், காயல் பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, கமி ஷனர் குமார் சிங், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.