கோவை பேக்கரிகளில் காலாவதி தேதியின்றி ரொட்டி விற்றால் கடும் நடவடிக்கை
- கெட்டுப் போகும் வரையில் விற்பனை செய்ய முயற்சி
- மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவை,
கோவை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய, சிறிய பேக்கரிகள் உள்ளன.
இதில், மாநகரில் செயல்படும் பெரும்பாலான பேக்கரிகள் தாங்களே ரொட்டிகளை உற்பத்தி செய்து வருகின்றன.
இப்படி செய்யப்படும் ரொட்டிகளை கவரில் அடைத்து 'பிரஷ் பிரட்' என கடைகளுக்கும், மற்ற பேக்கரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். ரொட்டி தயாரிப்பு பணியை குடிசை தொழில் போன்று செய்து வருகின்றன. ஆனால், இப்படி தயார் செய்யப்படும் ரொட்டிகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடுவதில்லை.
இது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், இது 'இன்று' தயாரிக்கப்பட்டது என கூறி பேக்கரி கடைக்காரர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுவாக ரொட்டி வகைகள் தயாரிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் காலாவதியாக கூடியவை. இதனை காலாவதி தேதிக்குள் விற்பனை செய்து விட வேண்டும்.
ஆனால், பேக்கரிகள் தாங்கள் தயார் செய்யும் ரொட்டிகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல், ரொட்டிகள் கெட்டுப் போகும் வரையில் விற்பனை செய்ய முயற்சி செய்கின்றனர்.
பிரெஷ் பிரட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இது போன்ற காலாவதி தேதி இல்லாத ரொட்டிகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது:-
ரொட்டி பாக்கெட்டு களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கட்டாயம் குறிப்பிட்டுதான் விற்பனை செய்ய வேண்டும்.
தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் ரொட்டி பாக்கெட்டுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காலாவதி தேதியில்லா மல் ரொட்டி விற்பனை செய்வது குறித்து பேக்கரிக ளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள் ளது. மேலும், காலாவதி குறிப்பிடாமல் விற்பனை செய்வது மற்றும் உணவுப் பொருள்கள் குறித்த பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.