உள்ளூர் செய்திகள்

நிலக்கரி சுரங்க விவகாரம்: பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பாதது ஏன்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published On 2023-04-05 08:34 GMT   |   Update On 2023-04-05 08:34 GMT
  • இந்தியா முழுவதும் 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் தோண்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாதது ஏன்? இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம்.

சென்னை:

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் தோண்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே என்.எல்.சி. சுரங்கத்தால் 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் டெல்டா பகுதியில் புதிதாக மூன்று சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு இருப்பது விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தான் மீத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்.

தற்போது இந்த விவகாரத்திலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தால் போதாது. 38 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாதது ஏன்? இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே சட்டமன்றத்தில் மட்டும் பேசினால் போதாது. பாராளுமன்றத்திலும் பேசி இதை ரத்து செய்ய முழு மூச்சோடு தி.மு.க. எம்பிக்கள் கடமையாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News