உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனம் முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை தராததால் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்

Published On 2022-08-02 15:15 IST   |   Update On 2022-08-02 15:15:00 IST
  • முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.
  • பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:

நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தின் வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த நிதி நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் சார்பாக தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் வங்கியில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பணத்தை விரைந்து கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News