உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் மணியடிப்பதில் இருதரப்பினர் பயங்கர மோதல் - போலீசார் குவிப்பு

Published On 2023-07-16 12:50 IST   |   Update On 2023-07-16 12:50:00 IST
  • மணியடிக்கும் பிரச்சினையில் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
  • போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

வடமதுரை:

திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு சாமி தரிசனத்திற்கு வருகின்றனர். மேலும் புதிய வாகனங்கள் வாங்கியதும் இங்கு சிறப்பு பூைஜ செய்தபின்னரே பயணத்தை தொடங்குகின்றனர்.

மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து செல்கின்றன. இதனால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறிய கோவிலாக இருந்து தற்போது அதிக வருவாய் பெரும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த கோவிலில் மணியடிக்கும் பணியை ஒரு சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

ஆடிமாதம் நாளை தொடங்கும் நிலையில் அதிக அளவு பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். அப்போது அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் மற்றொரு தரப்பினர் தற்போது மணியடிக்கும் பணியில் ஈடுபடுவதாக வந்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதுகுறித்து அறிந்ததும் திண்டுக்கல் மண்டல துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பூசாரிகள் இல்லாமல் இருந்தபோது பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்தனர். தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் ஏற்படும் பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

Tags:    

Similar News