உள்ளூர் செய்திகள்

முக்கூடலில் ஆன்மிக சுற்றுலா வந்தபோது சோகம்: தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை என்ஜினீயர் பிணமாக மீட்பு

Published On 2024-02-26 07:32 GMT   |   Update On 2024-02-26 07:32 GMT
  • ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.
  • முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முக்கூடல்:

காஞ்சிபுரம் நாகதீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை மாணிக்கம். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு மோகன்ராஜ், நவீன் (வயது 23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

துரை மாணிக்கம் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக ரெயிலில் நேற்று காலையில் நெல்லை வந்தார். பின்னர் அவர்கள் பாபநாசம் கோவிலுக்கு சென்று விட்டு, மாலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை அண்ணன் மோகன்ராஜ் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய நவீனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக நவீன் உடலை தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மதியம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நவீன் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் மகன் நீரில் மூழ்கி மாயமானதால் அவரது பெற்றோர் கரையில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் கண்கலங்க செய்தது.

Tags:    

Similar News