உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவன் ஓட்டிய கார் மோதியதில் மூதாட்டி பலி

Published On 2025-02-23 15:53 IST   |   Update On 2025-02-23 15:53:00 IST
  • விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது60). இன்று காலை அவர் வீட்டு முன்பு கோல மிட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் தனது தந்தை பயன்படுத்தும் காரை ஓட்டினார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தாறுமாறாக ஓடி வீட்டு முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்த சரஸ்வதி மீது மோதியது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது. போலீசார் விரைந்து வந்து காரை ஒட்டிய மாணவரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் பலியான சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவனின் தந்தை வீட்டில் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை தயார் செய்து கார் மூலமாக அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார். அந்த காரை இன்று காலை மாணவன் ஓட்டியபோதுதான் தறி கெட்டு ஓடி வீட்டு முன்பு கோலமிட்ட மூதாட்டியின் உயிரை பறித்து விட்டது.

அந்த நேரத்தில் அவ்வழியே மற்றவர்கள் வராததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News