உள்ளூர் செய்திகள்

புகார் அளிக்க வந்த ஏழைக் குடும்பத்திற்கு அரிசி, மளிகை மற்றும் புதிய ஆடைகளை விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் வழங்கிய போது எடுத்தபடம்

புகார் அளிக்க வந்த ஏழைக் குடும்பத்திற்கு அரிசி, மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்த டி.எஸ்.பி.: சமூக ஆர்வலர்கள் பாராட்டு

Published On 2023-04-20 07:54 GMT   |   Update On 2023-04-20 07:54 GMT
  • கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.
  • புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கடலூர்:

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே. ஜே. நகர் பகுதியில் வசித்து வருபவர் பானுமதி. இவர் கணவர் காந்தி. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பானுமதியின் கணவரின் பூர்வீக இடமான 8 சென்ட் வீட்டுமனையை, வேறொரு நபர் பட்டா மாறுதல் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பூர்வீக இடத்தை மீட்டு தர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பானுமதி அவருடைய மகள் பாக்கியலட்சுமி மற்றும் 2 பேத்திகளுடன் விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து முறையிட்டார்  புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், புகார் அளிக்க வந்த அப்பெண்மணியின் ஆதரவற்ற ஏழ்மை நிலையை கண்டு மனம் கலங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், அக்குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், பானுமதி அவருடைய மகள் மற்றும் 2 பேத்திகளுக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்து, 2 பேத்திகளையும் பள்ளியில் சேர்த்து நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் எனவும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என உறுதி அளித்தார். மேலும், ஒரு ஆட்டோவை வரவழைத்து அக்குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். புகார் அளிக்க வந்த பெண்மணியின் ஆதரவற்ற வறுமை நிலையை கண்டு உடனடியாக உணர்ந்து, அரிசி மற்றும் மளிகை பொருட்கள், ஆடைகள் வாங்கித் தந்து ஆட்டோவில் வழியனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News