உள்ளூர் செய்திகள்

பரமத்தி ஊருக்குள் வராத பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தபோது எடுத்த படம்.

ஊருக்குள் வராத பஸ்கள் சிறை பிடிப்பு

Published On 2022-07-29 08:40 GMT   |   Update On 2022-07-29 08:40 GMT
  • பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரமத்தியை மையமாகக்கொண்டு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றனர்.
  • இந்நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பரமத்தி நகருக்குள் வருவதில்லை என நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய நகரங்களில் பரமத்தியும் ஒன்றாகும். பரமத்தியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், சார்நிலைக் கருவூலம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரமத்தியை மையமாகக்கொண்டு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பரமத்தி நகருக்குள் வருவதில்லை என நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் பயணிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என அனைவரையும் (பைபாஸ்) புறவழிச்சாலையில் இறக்கி செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் புறவழிச்சாலையில் இறக்கி விடப்படும் பயணிகள் அங்கிருந்து நகருக்குள் வர அச்சம் அடைகின்றனர்.

பரமத்தி பகுதி மக்கள் இதுகுறித்து பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் பரமத்தி நகருக்குள் வராமல் சென்ற தனியார் பஸ்சை இப்பகுதி பொதுமக்கள், பேரூராட்சி தலைவர் மணி ,துணைத்தலைவர் ரமேஷ்பாபு மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அழைத்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் 1 மணி நேரத்திற்கு மேல் அந்த வழியாக வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags:    

Similar News