கோவை- பொள்ளாச்சி சாலை வழியாக மருதமலைக்கு மீண்டும் பஸ்கள் இயக்க வேண்டும்
- 2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
- கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி, காந்திநகர், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருதமலைக்கு பஸ்கள் இயங்கி வந்தன. அது மருதமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. எளிதாக பயணம் செய்து மருதமலை சென்று முருகனை தரிசித்து வந்தனர்.
ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மருதமலை பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் மருதமலைக்கு செல்வது வழக்கம்.
வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கூட காந்திபுரம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து மருதமலைக்கு எளிதாக பஸ் ஏறி செல்கின்றனர். ஆனால் கோவையிலேயே பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு மருதமலைக்கு செல்லும் அவல நிலை தற்போது உள்ளது.
2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பொள்ளாச்சி சாலையில் இருந்து மருதமலைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மருதமலைக்கும், திருச்சி சாலை சிங்காநல்லூருக்கும், மேட்டுப்பாளையம் ரோடு துடியலூருக்கும் நேரடி பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே 8 ஏ பேருந்து போத்தனூரில் இருந்து திருச்சி சாலை வழியாக சிங்காநல்லூர் மற்றும் இருகூர் பகுதிக்கு இயங்கி வந்தது.
46-ம் நம்பர் பஸ் போத்தனூரில் இருந்து மருதமலைக்கு சென்று வந்தது. 4-ம் நம்பர் பஸ் கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்திற்கு சென்று வந்தது. இவை அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய வழித்தடங்களில் பேருந்து இல்லாத காரணத்தால் இந்த பகுதிக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்த நிலையில் உள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் பயணிகள் 2-3 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கோவை பொள்ளாச்சி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
எனவே போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மேற்படி வழித்த டங்களில் பேருந்துகளை இயக்கினால் பயணிகளின் சிரமம் குறைவது மட்டுமின்றி, இனிதான பயணமும் மேற்கொள்ள முடியும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.