உள்ளூர் செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 860 பெண் பணியாளர்களை திரும்ப அனுப்ப கோரிக்கை

Published On 2022-10-11 15:01 IST   |   Update On 2022-10-11 15:44:00 IST
  • இதனால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவனம் அண்டை மாநிலத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கிருஷ்ணகிரி, 

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 860 பெண் பணியாளர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாரந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் அதன் தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கெலமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டு, செல்போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை மூலம் 18 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு படித்த இளம் பெண்கள் ஆண்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சிறப்பு ரெயில் மூலம் 860 பெண்கள் அழைத்து வரப்பட்டு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மனித வளம் நிறைந்த தமிழ்நாட்டில் படித்த இளம் பெண்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அந்த தனியார் நிறுவனம் ஆட்களை அழைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

அழைத்து வரப்பட்ட 860 பெண் பணியாளர்களை திரும்ப அனுப்ப வேண்டும், உள்ளூர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

மேலும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு கொள்கை 18 வயது முதல் 21 வயது வரை மாற்றி 22 வயது வரை உயர்த்த வேண்டும். இனி வெளிமாநிலத்தில் இருந்து மக்களை பணி அமர்த்த மாட்டோம் என்கிற முடிவை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலைவாய்ப்பு என்கிற சட்டம் கொண்டு வருவோம் என அறிவித்துள்ள நிலையில், தனியார் நிறுவனத்தின் இந்த முடிவு அரசுக்கு எதிரானது.

எனவே பணியமர்த்தப்பட்ட 860 பெண் பணியாளர்களை திரும்ப அனுப்பிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News