வருசநாட்டில் உள்ள ஒரு சூளையில் தயார் நிலையில் உள்ள செங்கல்கள்
வாழ்வாதாரம் இழக்கும் செங்கல் சூளை தொழில்
- கண்மாய்கள் தூர்வாரப்படாததால் கரம்பை மண் கிடைக்காமல் செங்கல் சூளை தொழில் வாழ்வாதாரம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
- அரசு சார்பில் வங்கி கடன்கள் வழங்கி செங்கல் சூளை தொடர்ந்து நடத்த உதவ வேண்டும்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, சோலைத்தேவன்பட்டி, உப்புத்துரை, தங்கம்மாள்புரம், வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது.
விலைவாசி உயர்வு, பணியாளர்கள் பற்றாக்குறை, கரம்பை மண் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த தொழில் தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. சூளைக்கு தேவையான விறகுகள், மண், கரம்பை ஆகிய அனைத்தும் விலை அதிகரித்து வருவதால் செங்கல் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது.
இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் தூர்வாரினால்தான் செங்கல் சூளைக்கு தேவையான கரம்பை மண் கிடைக்கும். ஆனால் பல கண்மாய்கள் தூர்வாரப்படாததால் மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் ஒன்றின் விலை ரூ.5ல் இருந்து ரூ.6ஆக அதிகரித்துள்ளது.
இந்த தொழிலை நம்பி கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் உள்ளனர். செங்கலை ஏற்றிச்செல்லும் பணியிலும் ஏராளமான சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி மற்றும் இதர செலவுகள் என கணக்கு பார்த்தால் வேலை ஆட்களுக்கும், செங்கல் சூளைக்கும் சரிசமமாக உள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் சூளைகள் மூடப்படுவது அதிகரித்து வருவதாக இதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசு சார்பில் வங்கி கடன்கள் வழங்கி செங்கல் சூளை தொடர்ந்து நடத்த உதவவேண்டும். இல்லையெனில் மாவட்டத்தில் உள்ள மற்ற சூளைகளுக்கும் மூடுவிழா நடத்த வேண்டிய நிலை உருவாகும் என்று இதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.