உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளில் காலை உணவு திட்டம்

Published On 2023-08-25 09:19 GMT   |   Update On 2023-08-25 09:19 GMT
  • அமைச்சர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
  • அமைச்சர் ராமச்சந்திரன் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஏற்கனவே 63 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 290 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா இன்று காலை குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டட்டி சுங்கம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

குழந்தைகளுக்கும் அவர் உணவு ஊட்டி விட்டார். இதனால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடன் காலை உணவை சாப்பிட்டனர்.

இதுபற்றி அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி காலை உணவுதிட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கம் அரசு பள்ளியில் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்தில் உள்ள 187 ஊராட்சி பள்ளிகளிலும், 80 பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளிலும், 23 நகரசபைக்கு உட்பட்ட பள்ளிகளிலும் என மொத்தம் 290 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News