உள்ளூர் செய்திகள்

டவுன் நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் ஒருநபருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட போது எடுத்தபடம்.

நெல்லையில் இன்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

Published On 2022-07-15 09:49 GMT   |   Update On 2022-07-15 09:49 GMT
  • கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
  • தடுப்பூசி செலுத்தாவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை:

கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

அவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் போடப்படும் என்பதால் மக்களிடம் அதற்கு அதிக ஆர்வம் இல்லை.

இந்நிலையில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நாடுமுழுவதும் இன்று தொடங்கப்பட்டது. தமிழகத்திலும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது.அதன்படி ஏற்கனவே செயல்பட்டு வரும் முகாம்கள் தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான நெல்லை டவுன் ரதவீதிகள், நெல்லையப்பர் கோவில், சந்திப்பு ரெயில்நிலையம், வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தம் மற்றும் முக்கிய ஜவுளிக்கடைகள் முன்பு இன்று தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

பாளை மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதல் நாளான இன்று குறைந்த அளவிலான பொதுமக்களே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags:    

Similar News