குண்டு வெடித்ததில் சேதம் அடைந்துள்ள டீக்கடை கண்ணாடிகள்
மாங்காட்டில் நடுரோட்டில் குண்டு வெடித்து சிதறியது- ரவுடி படுகாயம்
- பையில் இருந்து தவறி கீழே விழுந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- குண்டு வெடித்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் நிலை குலைந்து கீழே விழுந்தனர்.
பூந்தமல்லி:
சென்னையை அடுத்துள்ள மாங்காடு பரணி புத்தூரில் மவுலிவாக்கம் சாலை சந்திப்பில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 2 பேரில் ஒருவர் பை ஒன்றை வைத்திருந்தார். அந்த பையில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளன.
இதில் ஒரு குண்டு பையில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில் அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகில் இருந்த டீக்கடையின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதனால் பரணிபுத்தூர் சந்திப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். குண்டு வெடித்தது பற்றி மாங்காடு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குண்டு வெடித்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் நிலை குலைந்து கீழே விழுந்தனர். இதில் வாலிபர் ஒருவர் பலத்த காயம் அடைந்திருந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
அவர்கள் காயம் அடைந்த வாலிபரை அங்கேயே தவிக்க விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
காயத்துடன் போராடிய வாலிபரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெயர் வினோத் குமார் (27) என்பதும் அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ரவுடி என்பதும் தெரிய வந்தது.
ரவுடி வினோத்குமாரை போலீசார் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வினோத்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வந்து தப்பிய 2 பேர் குறித்தும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரவுடி வினோத்குமார் தேடப்படும் குற்றவாளி என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
வினோத்குமார் கூட்டாளிகளுடன் வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு எங்கு சென்றார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வினோத் குமார் மீது எதிரிகள் யாரை யாவது கொலை செய்யும் நோக்கத்துடன் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.