உள்ளூர் செய்திகள்

கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

Published On 2023-12-08 10:11 GMT   |   Update On 2023-12-08 10:11 GMT
  • மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.
  • மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமம்,மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது38). கொத்தனார். இவரது மனைவி தாந்தோணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சமீபத்தில் பெய்த கனமழையால் கன்னிகைப்பேர் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வந்த போது கன்னிகைப்பேர்-திருக்கண்டலம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்தார். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவரை அவ்வழியே சென்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர். இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் கால்வாயில் ராஜாவின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூரை அடுத்த, பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமம் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல்(51). இவர் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மயில்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது சத்தரை பஸ்நிறுத்தம் எதிரே உள்ள குளத்தில் குளித்தார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (30). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை எதிரே உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது மகேஷ் சிறுநீர் கழிப்பதற்காக டீக்கடையின் சுவர் ஓரம் சென்றார். அவர் அருகில் இருந்த மின்இணைப்பு பெட்டியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News