போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரிசு வழங்கினார்.
முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
- மண்டல அளவில் 8 போட்டிகள் மற்றும் முதல் முறையாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.
- 10 ஆயிரத்து 306 வீரர், வீராங்கள் பதிவு செய்து கலந்து கொண்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது :-
முதலமைச்சர் கோப்டை போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள், பொதுபிரிவினருக்கு, அரசு ஊழியர்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என 5 பிரிவுகளாக மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 போட்டிகள் மற்றும் முதல் முறையாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் இணையதளம் மூலமாக 10,306 வீரர், வீராங்களை பதிவு செய்து கலந்து கொண்டனர். பரிசு பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். தேசிய அளவில் விளையாடக்கூடிய வீரர்களை திருவாரூர் மாவட்டம் பெற்றுள்ளது. மிகப்பெரிய கபடி வீரரர்களை பெற்றுள்ளது வடுவூர் பகுதியாகும். நன்றாக படிக்க வேண்டும். அதேபோல் நன்றாக விளையாட வேண்டும். விளையாட்டின் மூலம் மன அமைதியும், உடல் வலிமையும் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகதலைவர் மதிவாணன், திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பியூலாஜேன் சுசீலா, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் , மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனபிரியா செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், திருவாரூர் நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.