உள்ளூர் செய்திகள்

புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை கால்நடைத்துறை இயக்குனர் ஆய்வு

Published On 2022-11-19 08:54 GMT   |   Update On 2022-11-19 08:54 GMT
  • கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
  • அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கண்காணித்து வருகின்றனர்.

செங்கோட்டை:

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் நெல்லை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பொன்வேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கால்நடைகள், வாத்து, கோழிகள், முட்டைகள், இறைச்சி, கோழி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கால்நடை நோய் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சத்தியநாராயணன் புளியரை சோதனை சாவடிக்கு திடீரென நேரில் வந்து பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி தெளிப்பதை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது கால்நடை டாக்டர்கள் ஜெயபால்ராஜா, செல்வராணி, கால்நடை ஆய்வாளர் தினேஷ், கால்நடை பராமரிப்பு உதவி யாளர் லூர்து பிரான்சிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News