ஓசூர் பஸ் நிலையத்தில் 6 மாத குழந்தையை கடத்திய பெங்களூரு பெண் கைது
- பஸ் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
- கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் வருவதற்காக காத்திருந்தனர். பின்னர் பஸ் நிலையத்திலேயே அவர்கள் தூங்கினர்.
கண் விழித்து பார்த்தபோது அவர்களது 6 மாத குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பஸ் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ஓசூர் போலீசில் அவர்கள் புகார் செய்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு பெண் வடமாநில தம்பதியின் குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து செல்ேபான் சிக்னல் மூலம் பெங்களூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அந்த பெண்ணை மடக்கி கைது செய்தனர். அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர். காணாமல் போன குழந்தையை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டது குறிப்பிடதக்கது.
இதேபோல அந்த பெண் வேறு குழந்தைகளை கடத்தியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.