உள்ளூர் செய்திகள்

முறையான அறிவிப்பின்றி கோவில் கடைகளை ஏலம் விட வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

அதியமான் கோட்டையில் அதிகாரிகள்-பொதுமக்கள் வாக்குவாதத்தால் கோவில் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

Published On 2022-08-11 15:25 IST   |   Update On 2022-08-11 15:25:00 IST
  • ஏலத்தில் ஏற்கனவே கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
  • நேற்று கோவில் வளாகத்தில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் 22 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள அதியமான் கோட்டையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான காலபைரவர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்று இருப்பதினால் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் விழா நாட்களில் அதிக அளவில் வருவார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் காலபைரவருக்கு வழிபாடு செய்வதற்காக பூஜை பொருள்களை கோவில் வளாகத்தில் வைத்துள்ள கடைகளில் வாங்குவார்கள். நாளுக்கு நாள் கோவில் வளாகத்தில் கடைகள் விரிவடைந்து கோவில் நிர்வாகத்திற்கு வருமானத்தை அதிகரித்துள்ளது.

இதனால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நேற்று 22 கடைகளுக்கு ஏலம் விடுவதற்காக கூட்டம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஏற்கனவே கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏலம் நடத்திய செயல் அலுவலரிடம் ஏன் முறையாக அறிவிப்பு இல்லாமல் ஏலம் நடக்கின்றது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் முறையாக அறிவிப்பு செய்து மறு ஏலம் நடத்தப்படும் என ஏலத்தை நிறுத்தி சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்;-

அதியமான் கோட்டையில் காலபைரவர் கோவில் கடந்த சில வருடங்களாகவே மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி, நவமி போன்ற விசேஷ நாட்களில் அதிக அளவில் வருகிறார்கள்.

இதனால் கோவில் வளாகத்தில் கடைகள் வைப்பதற்காக இந்து அறநிலையத்துறை சார்பாக ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோன்று நேற்று கோவில் வளாகத்தில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் 22 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது.

ஏலம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து கோவில் வளாகத்திற்கு வந்து ஏலம் நடத்திய செயல் அலுவலரிடம் முறையாக அறிவிப்பு செய்தீர்களா? என கேட்டோம். அதற்கு செயல் அலுவலர் உங்களிடம் சொல்லி ஏலம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என பேசினார்.

இதனால் எங்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக முறையாக அறிவிப்பு செய்த பின்னரே மறு ஏலம் நடைபெறும் என கூறிவிட்டு சென்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags:    

Similar News