ஆடுதுறையில், நாளை பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கருத்தரங்கம்
- பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
- திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திட வேளாண்மைத்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கை 2022-23 அறிவிப்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இரக மேம்பாடு, பகுதிக்கேற்ற சிறந்த இரகங்களை உருவாக்கும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஆண்டுக்கு 3 முறை கண்காட்சி நடத்தப்படும்.
அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் இரகங்களை காட்சிப்படுத்தலாம். விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
வேளாண், தோட்ட க்கலை விவசாயிகள் தங்களது ரகங்களை காட்சிப்படுத்துவதற்கு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும், ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைந்த சிறந்த மருத்துவ பண்புகளை கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உயர் இரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி, கண்காட்சியில் பங்கு கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியை பெருக்கிட வேண்டும்.
கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.