உள்ளூர் செய்திகள்

இறந்த வளர்ப்பு நாயின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வரும் ஓவியர் குடும்பத்தினர்

Published On 2023-08-08 09:52 GMT   |   Update On 2023-08-08 09:52 GMT
  • வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
  • நாயின் படத்திற்கு தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம்.

கும்பகோணம்:

கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). ஓவியர்.

இவரது மனைவி கலைச்செல்வி (58). இவர்களுக்கு ராகமாலிகா என்கிற மகளும், மனோ என்கிற மகனும் உள்ளனர்.

பன்னீர்செல்வத்தின் மகன் மனோவும் ஓவியராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நாய் ஒன்றை ஜிஞ்சு என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர்.

இந்த வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் வளர்ப்பு நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.

இதனால் வீட்டில் இருந்த நபர் ஒருவரை இழந்து தவிக்கும் உணர்வில் பன்னீர்செல்வம் குடும்பமே துயரத்தில் மூழ்கினர்.

பன்னீர்செல்வம் குடும்பத்தினர், வளர்ப்பு நாயின் உருவப்படத்தை வீட்டில் வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஓவியர் பன்னீர்செல்வம் கூறுகையில், வளர்ப்பு நாயை, நாங்கள் வீட்டில் ஒரு நபராகவே வைத்து பராமரித்து வந்தோம். வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் போதொல்லாம் அந்த நாய் தான் வீட்டுக்கு பாதுகாப்பு.

எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வோம்.

ஒருமுறை வீட்டுக்குள் புகுந்த பெரிய பாம்பை ஜிஞ்சு மட்டும் தனியாக குறைத்து விரட்டியது. திடீரென உடல் நலக்குறைவால் வளர்ப்பு நாய் உயிரிழந்தது.

இதனால் அதன் உருவப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி பிடித்த உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தி வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News