40 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்று தர ஏற்பாடு-கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன் பேட்டி
- கடந்த ஆண்டில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் விழிப்புணர்வு மூலமாக 130 குற்றங்கள் தடுக்கப்பட்டது.
- நடப்பாண்டில் இதுவரை 88 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
கோவை,
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 1,318 பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் இந்த விழிப்புணர்வு மூலமாக 130 குற்றங்கள் தடுக்கப்பட்டது. நடப்பாண்டிலும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடக்கிறது.
40 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ப்ரொஜெக்டர் திட்டம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மிஷன் ப்ராஜெக்ட் பிரீ திட்டத்தின் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாவட்ட அளவில் 126 கல்லூரிகள் செயல்படுகிறது. இதில் 13 இடங்களில் போதை பொருள் நடமாட்டம் விற்பனை இருப்பதாக தெரிகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மாவட்ட அளவில் 226 சிறார் பாலியல் பலாத்கார துன்புறுத்தல் தொடர்பாக போக்சோ வழக்குகள் பதிவானது. நடப்பாண்டில் இதுவரை 88 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்