அரியலூர் பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த சாமியார், மனைவியுடன் கைது
- அரியலூர் பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த சாமியார், மனைவியுடன் கைது
- போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தியாகம் டேனியலை ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், தீபா ஜெனிபரை திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையிலும் அடைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேல மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது 2-வது மனைவி ஜூலி (வயது 48). கணவர் மற்றும் கணவருடைய முதல் மனைவி இறந்து விட்ட நிலையில், ஜூலி கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன்களுடன் வசித்து வருகிறார். அதில் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் காவனூர் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த தியாகம் டேனியல் (62) என்பவரை ஜூலி சந்தித்துள்ளார்.அப்போது தியாகம் டேனியல், ஜூலியிடம் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளார்கள் என்றும், அதனை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து தியாகம் டேனியல், அவரது மனைவி தீபா ஜெனிபர் (43) ஆகியோர் 15 நாட்கள் ஜூலி வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர்.
மேலும் ஜூலியை பயமுறுத்தியும், வீட்டில் புதையல் இருப்பதாகவும் கூறி, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி இதற்காக ஜூலியிடம் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பலமுறையாக அவர்கள் மொத்தம் ரூ.25 லட்சம் பெற்றுள்ளார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூலி இதுகுறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு பழனிச்சாமியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தியாகம் டேனியல், தீபா ஜெனிபர் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் திண்டிவனம் அருகே பதுங்கியிருந்த தியாகம் டேனியல், தீபா ஜெனிபர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தியாகம் டேனியலை ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், தீபா ஜெனிபரை திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.