உள்ளூர் செய்திகள்

செந்துறை அருகே நூறாண்டுகள் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு

Published On 2023-05-22 07:22 GMT   |   Update On 2023-05-22 07:22 GMT
  • செந்துறை அருகே நூறாண்டுகள் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்
  • கிராம மக்கள் வழிபாடு நடத்தி நூதன போராட்டம்

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது இரும்புலிக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தின் நடுவே நூறாண்டுகள் பழமையான ஆலமரமும், அதன் அருகிலேயே கோவில் ஒன்றும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த ஆலமரத்தில் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெயில் காலங்களில் இளைப்பாரி வந்தனர். இந்த ஆலமரம் இந்த ஊரின் ஒரு அடையாளமாகவும் திகழ்ந்து வந்தது.இந்த நிலையில் தற்போது இரு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் இந்த ஆலமரத்தை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்கு தேவையான இடங்கள் இருக்கும்போது ஏன் இந்த மரத்தை அகற்ற வேண்டும் என்பதோடு மரத்தை அகற்றாமல் சாலை பணியை அமைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.இருப்பினும் அதிகாரிகள் மரத்தை அகற்ற வேண்டும் என்று உறுதியாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் ஊரின் அடையாளமாகவும், வழிப்போக்கர்கள் மற்றும் கிராம மக்களையும் வெயிலில் இருந்து காத்து வந்த பழமையான ஆலமரம் அகற்றப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக 100 ஆண்டுகளுக்கு மேலாக நிழல் தந்து மக்களை காப்பாற்றிய ஆலமரத்தை தெய்வமாக வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே இருந்த பூசாரியிடம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயபக்தியிடம் ஆலமரத்தை வணங்கி விபூதியிட்டு சென்றனர். மனிதன் செய்யும் தவறுக்கு மரத்திற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என்று அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் அந்த ஆலமரத்தை அகற்றாமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News