உள்ளூர் செய்திகள்

வக்கீல் கொலையில் முக்கிய குற்றவாளி கைது

Published On 2022-10-28 12:45 IST   |   Update On 2022-10-28 12:45:00 IST
  • வக்கீல் கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்
  • தப்ப முயன்றபோது போலீசார் சுற்றி வளைத்தனர்

அரியலூர்:

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர் உள்ளிட்ட சிலர் மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் சாமிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செல்வமணியை கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்தனர்.

இதனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த சாமிநாதன் சொந்த கிராமத்திற்கு வராமல் சென்னையிலேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் அனைக்குடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு தனது தங்கையின் திருமணத்திற்காக கடந்த செப்டம்பர் 7-ந்தேதி வந்துள்ளார்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செல்வமணியின் தம்பி இளையராஜா உள்ளிட்ட சிலர் கூலிப்படையை வைத்து திருமண மண்டபத்தில் இருந்து அருகிலுள்ள ஓட்டலில் டீ சாப்பிட வந்த சாமிநாதனை வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இக்கொலையில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் திருநறையூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி, விஜய், நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், தமீம் அன்சாரி, கரண், தினேஷ்குமார், ஆகியோர் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளியான இளையராஜாவின் மனைவி ரெஜினா, செல்வகுமார், செல்வம், நவீன் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்தது, பணம் கொடுத்தது மற்றும் சாமிநாதன் யார் என அவரை அடையாளம் காட்டியது போன்ற குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான இளையராஜாவை தேடி வந்த நிலையில் தா.பழூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளையராஜா போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளையராஜா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News