- ஆண்டிமடம் அருகே ஆடு திருடிய 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது
- ஆடு திருடும் கும்பலிடம் இருந்து மூன்று ஆடு, இரண்டு பைக் பறிமுதல்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தஞ்சாவூர் சாவடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராயர் (78) ஜோஸ்பின் மேரி (75) தம்பதியினர் ஆடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு தங்கள் வீட்டின் முன் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர்.இந்நிலையில் நேற்று ஆடு சத்தம் போடுவதைப் பார்த்து தம்பதியினர் வெளியே வந்து பார்த்தபோது ஒரு மர்ம நபர் ஆட்டை திருடி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ஆட்டுடன் மர்ம நபரை பிடித்தனர்.இதைப் பார்த்து மறைவில் இருந்த 2 பேர் இரண்டு ஆடுகளுடன் தங்களது பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளனர். அவர்களையும் கிராம பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மர்ம நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் கொழை- சாவடிக்குப்பம் கிராம பகுதியைச் சேர்ந்த ஹரி விஜய் (23), மனோஜ் குமார் (18), அன்புமணி, ஜெயசூர்யா (20), சூர்யா (19) என்பதும், ஏற்கனவே அகரம் கிராமம் பட்டிதெரு சுதாகர் வீட்டில் 2 ஆடுகளை திருடியதும் தெரியவந்தது.இதையடுத்து 5 பேரயும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆடுகள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.