உள்ளூர் செய்திகள்

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

Published On 2022-09-24 15:11 IST   |   Update On 2022-09-24 15:11:00 IST
  • பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • கால் நடைகள் தீவனங்கள் விலை உயர்ந்துவிட்டதால்

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து கூறுகையில், மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உரத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கும் தனியார் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.30 வாங்குவதை தடுக்க வேண்டும். அத்மா திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி விவசாயிகளுக்கு மாவட்ட, மாநில அளவில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் கூட்டுறவுத் துறை பயிர்கடன்களை வழங்க வேண்டும் என்றார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறுகையில், கடந்த மாதம் கொள்ளிடத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குருவாடு, தூத்தூர், வைப்பூர், முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான், அரங்கோட்டை, அணைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சூரியக்காந்தி, பருத்தி, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இதனை வேளாண் துறையினர் கண்க்கீடு செய்து, அந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை தனியார் பால் பண்ணைகள் உயர்த்தினாலும், 2018 ஆண்டுக்கு பிறகு ஆவின் நிறுவனம் இன்னும் உயர்த்தப்படாமலே உள்ளது. ஆகவே கால் நடைகள் தீவனங்கள் விலை உயர்ந்துவிட்டதால், ஆவின் நிறுவனம் உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அனைத்து வரத்து பாசன வடிக்கால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றார்.

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த வருவாய் அலுவலர் கலைவாணி, அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News