உள்ளூர் செய்திகள்

அரியலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா

Published On 2022-12-26 15:32 IST   |   Update On 2022-12-26 15:32:00 IST
  • சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.
  • அரியலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஏலக்குறிச்சி, வரதராசன்பேட்டை,தென்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. இயேசு பிறப்பை கொண்டாடும் விதமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களையும், குடில்களையும் அமைத்திருந்தனர். கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ தேவாலயம், அலங்கார அன்னை தேவாலயம், தென்னூர் புனித லூர்து அன்னை தேவாலயம், கூவத்தூர் புனித அந்தோனியார் ஆலயம், பட்டிணங்குறிச்சி புனித லூர்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூர் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குதந்தைகள் வழங்கினர். கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


Tags:    

Similar News