பயிர் காப்பீடு திட்டத்தில் முந்திரியை சேர்க்க வேண்டும்-அரியலூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலிறுத்தல்
- பயிர் காப்பீடு திட்டத்தில் முந்திரியை சேர்க்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலிறுத்தினர்
- இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.அதன்படி அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும் போது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஏரி, வாரிகளை அளந்து தூர்வார வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நில அளவீடு செய்யும் நில அளவையர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கொடுக்கும் மனுக்களை சீனியார்ட்டி பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும் என்றார்.காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசும் போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், தானியங்களை விற்பனை செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் காலம் கடந்து பணம் செலுத்தப்படுகிறது என்றார். எனவே ஒரிரு நாள்களில் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கை எடுக்க வேண்டும் என்றார்.விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் பேசும் போது, அரியலூர் மாவட்டத்தில் 60சதவீத முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை காப்பீடு திட்டத்தில் முந்திரியை சேர்க்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது பருவம் தவறி பெய்த மழையால் முந்தரி சாகுபடியில் பூ கருகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மற்ற பயிர்களுக்கு காப்பீடு செய்து இழப்பீடு வழங்குவது போல் முந்திரியையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.