ஆண்டிமடம் அருகே கொடிகம்பத்தில் கார் மோதி விபத்து-ஒருவர் பலி, 3 பேர் காயம்
- ஆண்டிமடம் அருகே கொடிகம்பத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் காயம் அடைந்தனர்
- எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த கொடி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது
ஜெயங்கொண்டம்:
சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(வயது65) (தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்). இவரும் இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (73) ஆகிய மூவரும் காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோயிலுக்கு சென்றனர். காரை சென்னை சிட்லபாக்கம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் சபரிவாசன் ஓட்டினார்.
கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பினர். ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் ரோட்டில் ராங்கியம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த கொடி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் சபரிவாசன், விபத்தில் இறந்து போன மனோகர் மனைவி பானுமதி, உறவினர் புவனேஸ்வரி, ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
இதையடுத்து அவ்வழியைச் சென்றவர்கள் 108க்கு தகவல் தெரிவித்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிமடம் போலீசார் இறந்து போன மனோகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.