அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்
- பதவி உயர்வு வழங்க கோரிக்கை
- அரியலூர் அண்ணாசிலை முன்பு போராட்டம் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில், காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும். 10ஆண்டுகள் பணியாற்றிய அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு விரைந்து பணப்பலன்கள் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் அங்கன் வாடி ஊழியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வி.ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் த.சகுந்தலா, பொருளாளர் பி.ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.