ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலரிடம் நகராட்சி ஆணையர், மேலாளர், நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி வரவேற்று பேசினார். மன்றம் பொருள் தீர்மானத்தை இளநிலை உதவியாளர் சாவித்திரி வாசித்தார். கூட்டத்திற்கு வருகை புரிந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் தொடங்கி தீர்மானம் வாசிக்கும் போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் செல்வராஜ், சுப்பிரமணியன், சேகர்.பாண்டியன் மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் மனோன்மணி, தேவேந்திரன், ஜோதிலட்சுமி அருள், பூபதியம்மாள் ராமையன் ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து தரையில் அமர்ந்து திடீரென நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. வார்டுகளுக்கும் நிதி ஒதுக்காமல் 6 தி.மு.க. வார்டுகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாரபட்சமின்றி அனைத்து வாடுகளுக்கும் பொது நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலரிடம் நகராட்சி ஆணையர், மேலாளர், நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.