உள்ளூர் செய்திகள்

சாதம் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்; சாதம் தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2022-11-07 09:47 GMT   |   Update On 2022-11-07 09:47 GMT
  • 1500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
  • தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது

தஞ்சாவூர்:

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும்.

6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

இதற்காக பக்தர்கள் இன்று காலையிலிருந்து அரிசி, காய்கறிகளை தானமாக செய்து வருகின்றனர்.

சுமார் 1500 கிலோ அரிசி, சுமார் 1000 கிலோ முள்ளங்கி, கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அரிசியை சாதமாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

மேலும் காய்கறிகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணியும் நடைபெற உள்ளது.

பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு

இன்று மாலை 4.30 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது.

காய்கறிகள் கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.

இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது.

அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும்.

இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News