கோவையில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த முதியவர் கைது
- கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
- பீரோவில் இருந்த ரூ.16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை
கோவை:
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி.கே.டி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 56). தொழில் அதிபர்.
இவர் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.20 லட்சம் வைத்திருந்தார்.
இந்த நிலையில் வியாபாரம் சம்பந்தமாக செல்வக்குமார் கடந்த 24-ந் தேதி சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து மறுநாள் கோவை திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது வீட்டு பீரோவில் இருந்த ரூ.16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை. மீதமுள்ள பணம் அப்படியே இருந்தது.
வீட்டு வேலைக்கு வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் அன்று வேலைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த செல்வக்குமார் தனது வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில், வீட்டு வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முதியவர் சகாதேவன்(62) என்பவர் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சகாதேவனை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து ரூ. 13.65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சகாதேவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.