உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்துக்கு கோவணத்துடன் மனு கொடுக்க வந்த முதியவர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு கோவணத்துடன் மனு கொடுக்க வந்த முதியவர்

Published On 2023-04-24 09:01 GMT   |   Update On 2023-04-24 09:01 GMT
  • கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மாடசாமி கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
  • அன்பு சுவரில் இருந்து வேட்டி எடுத்து கொடுத்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவணத்துடன் வந்த முதியவர்

நாங்குநேரி அருகே உள்ள கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மாடசாமி (வயது75) என்பவர் கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கிருந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். மனைவி இறந்துவிட்டார். எனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்ட வேண்டும் என கூறி 5 சென்ட் இடத்தை 2-வது மகன் கேட்டார். அதன்படி அவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தேன்.

ஆனால் அனைத்து இடத்தினையும் அவர் என்னிடம் இருந்து முறைகேடாக எழுதி வாங்கியது பின்னர் தெரியவந்தது. மேலும் என்னை கவனிக்காமல் வீட்டில் இருந்தும் துரத்திவிட்டார். எனவே அவரிடம் இருந்து எனது நிலத்தை மீட்டுதர வேண்டும் என கூறினார்.

பின்னர் அன்பு சுவரில் இருந்து வேட்டி எடுத்து கொடுத்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

கொலை மிரட்டல்

வி.கே.புரம் அருணாச்சல புரத்தை சேர்ந்த ஜெயசீலன் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு உள்ளது. அந்த பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிர மித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தெற்கு பாப்பான் குளத்தை சேர்ந்த கருப்பசாமி மனைவி மாரியம்மாள் (35) என்பவர் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நான் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 18-ந்தேதி பணியில் இருந்த போது ஒரு பெண் சாதி பெயரை கூறி என்னை அவதூறாக பேசினார். பின்னர் 20-ந்தேதி மீண்டும் கணவருடன் வந்து என்ைன அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளேன். அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News