உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு அருகே வீட்டுக்குள் கார் புகுந்து முதியவர் பலி

Published On 2025-07-22 11:23 IST   |   Update On 2025-07-22 11:23:00 IST
  • விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

திருச்செங்கோடு:

திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசாமி கோவிலில் சாமி கும்பிட 5 பேர் ஒரு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்தனர்.

திருச்செங்கோட்டில் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி அரியமங்கலத்துக்கு புறப்பட்டனர். இரவு 8 மணியளவில் கார் திருச்செங்கோடு உஞ்சனை அருகே சென்றது.

அப்போது காரை ஓட்டிவந்த யுவராஜன் என்பவர் தூங்கி உள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் பஸ் நிறுத்தம் அருகே இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் மீதும் மோதி இழுத்து சென்றது.

பின்னர் இந்த பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு கார் வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது வீட்டுக்கு முன்பு அமர்ந்திருந்த முருகேசன் (67) என்பவர் மீது கார் மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே நாற்காலியில் அமர்ந்தபடி முருகேசன் பலியானார்.

இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவர் யுவராஜன் மற்றும் காரில் பயணித்த சரவணன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்பக்கம் அமர்ந்திருந்த 3 பேர் காயமின்றி தப்பினர்.

இதுபற்றி தெரிய வந்ததும் திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News