உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் தலைக் குப்புற கவிழ்ந்தது விபத்து- குழந்தை உள்பட 4 பேர் காயம்

Published On 2023-02-16 12:27 IST   |   Update On 2023-02-16 12:27:00 IST
  • இருசக்கர வாகனத்தில் சென்ற தனசேகரன் பலத்த காயமடைந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
  • சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அத்திக்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 8 மாத குழந்தை ஜஸ்விகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி விஜயக்குமார் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை ஜஸ்விகா, மனைவி பிரியா ஆகியோருடன் சேலம் சென்றார். ஆம்புலன்சை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபு ஓட்டினார். சின்னசேலம் அடுத்த கனியாமூர் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சினை ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபு முந்தி செல்ல முயன்றார். அப்போது ஆம்புலன்ஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த தனசேகரன் மீது மோதி ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அதிர்ஷ்டவசமாக விஜயகுமார் அவரது மனைவி பிரியா மற்றும் 8 மாத குழந்தை ஜஸ்விகா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இருசக்கர வாகனத்தில் சென்ற தனசேகரன் பலத்த காயமடைந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற டிரைவர் பிரபு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News