உள்ளூர் செய்திகள்

அகில இந்திய கூடைப்பந்து இறுதிப்போட்டி- பெண்கள் பிரிவில் கேரள அணிகள் மோதல்

Published On 2023-06-01 09:13 GMT   |   Update On 2023-06-01 09:13 GMT
  • அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
  • கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்கிறது.

கோவை,

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இதில் அகில இந்திய அளவில் 20 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் அரையிறுதி போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் சென்னை வருமானவரித்துறை அணியை எதிர்த்து இந்தியன் ரெயில்வே அணி விளையாடியது. இதில் வருமானவரித்துறை அணி 67-58 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்தபடியாக ஆண்கள் பிரிவுக்கான 2-வது போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியை எதிர்த்து, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 86-77 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வருமானவரித்துறை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.

இதேபோல சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பெண்கள் பிரிவு அரையிறுதி போட்டியில் திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணியை எதிர்த்து, ஹுப்ளி தென்மேற்கு ரெயில்வே அணி விணையாடியது. இதில் கேரள மின்சார வாரிய அணி 92-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து பூனே மேற்கு ரெயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா போலீஸ் அணி 64-61 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்கள் அணியில் கேரளா மின்சார வாரிய அணி, கேரளா போலீஸ் அணிகள் ஆகியவை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன. இறுதி போட்டிகள் இன்று மாலை நடக்க உள்ளது.

Tags:    

Similar News