பொய்யான புகார் அளித்த கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் புகார் மனு
- கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது.
- சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி
கோவை,
தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. அப்போது அந்த பெட்ரோல் குண்டு போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியில் பட்டு கீழே விழுந்தது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத் என்ற ரவுடியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டு பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ஆனால் கவர்னர் மாளிகை அதிகாரிகள் கவர்னர் மாளிகை வளா கத்துக்குள் 4 பேர் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை போல் தோற்றத்தை ஏற்படுத்த தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
இதற்கு பா.ஜ.க.வும், கவர்னரும் துணை போகின்றனர். சென்னையில் பா.ஜ.க கொடிக்கம்பம் வைக்க அனுமதி அளிக்காத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பது போல பா.ஜ.க 5 பேர் கொண்ட விசாரணை குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த வேகத்தை பா.ஜ.க அரசு மணிப்பூரில் கடந்த 6 மாதமாக நடந்து வரும் கலவரத்தில் ஏன் காட்டவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று சமீப கால ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பா.ஜ.க.வும்., கவர்னரும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே போலீசார் பொய்யான புகார் அளித்த கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.