உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசியில் எடையளவு முத்திரையிடாத 40 வணிகர்கள் மீது நடவடிக்கை

Published On 2023-05-04 08:58 GMT   |   Update On 2023-05-04 08:58 GMT
  • கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.
  • எடை அளவுகளை முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு கொள்ள வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நெல்லை:

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள்,

தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி கடைகள் மற்றும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்பவர் நிறுவனங்களில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்படுதல் தொடர்பாக கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 27 நிறுவனங்கள் மற்றும் மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 11 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீன் மற்றும் இறைச்சி கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.

எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம், பொறுப்பு) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News