ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
- போலீஸ் வருவதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தன்னை போலீசார் கைது செய்ய கூடாது எனவும், தன்னை நெருங்கினால் கத்தியால் கையை கிழித்து இறந்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
- நீதிமன்ற ஆஜருக்கு பின்னர் சத்தியமூர்த்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி காட்டிநாயனப்பள்ளி ரேஷன் கடையில் விற்பனையாளர் உள்பட அரிசி கடத்தலில் ஈடுபட்ட மூவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது35) என்பவரை போலீசார் தேடி வந்தனர். சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
சத்தியமூர்த்தி கர்நாடக மாநிலத்தின் அரிசி விற்பதற்கு முக்கிய புரோக்கராக செயல்பட்டு வந்ததும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினருடன் பெத்ததாளப்பள்ளியில் தங்கி இருப்பதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் சத்தியமூர்த்தி பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது போலீஸ் வருவதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தன்னை போலீசார் கைது செய்ய கூடாது எனவும், தன்னை நெருங்கினால் கத்தியால் கையை கிழித்து இறந்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
சத்தியமூர்த்தியின் உறவினர்களும் போலீசாரை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் வீட்டின் பக்கவாட்டு கதவு வழியாக சென்று சத்தியமூர்த்தியை மடக்கி பிடித்தனர். பின்னர் நீதிமன்ற ஆஜருக்கு பின்னர் சத்தியமூர்த்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.