உள்ளூர் செய்திகள்

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு- விரைந்து தீர்வு காண பால் முகவர்கள் வேண்டுகோள்

Published On 2023-06-02 03:03 GMT   |   Update On 2023-06-02 03:03 GMT
  • சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பல்வேறு தரங்களாக பிரிக்கப்பட்டு ஆவின் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த கோரிக்கை தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் பால் உற்பத்தியாளர்கள் பலர் ஆவினுக்கு வழங்கி வந்த பாலை கூடுதல் விலைக்கு தனியார் பால் பண்ணைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் பால் வினியோகத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது:-

தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 14½ லட்சம் லிட்டர் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மீதமுள்ள 14½ லட்சம் லிட்டர் பால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் மூலம் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் பால் கொள்முதல் 43 லட்சம் லிட்டராக இருந்தது.

பால் கொள்முதல் விலை குறைவு, தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் பெறுவது, ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு பணம் வினியோகம் செய்வதில் தாமதம், பாலில் உள்ள கொழுப்பு சத்தை முறையாக ஆய்வு செய்யாமல் குறைவான தொகையை வழங்குவது போன்ற பல்வேறு காரணங்களால்தான் ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து வருகிறது.

தற்போதைய ஒரு நாள் பால் தேவை 29 லட்சம் லிட்டர் ஆகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தால்தான் 29 லட்சம் லிட்டர் பால் தாமதம் இல்லாமல் வினியோகிக்க முடியும்.

ஆவினில் தற்போதுள்ள கட்டமைப்பின்படி ஒரு நாளில் கொள்முதல் செய்யும் 29 லட்சம் லிட்டர் பாலை அன்றைய தினமே பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வினியோகிக்கும்போது தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும்போது ஒரு நாள் தேவையான 29 லட்சம் லிட்டர் பால் தவிர்த்து மீதமுள்ள பாலை பதப்படுத்தி மறுநாள் வினியோகத்திற்கு தயார் நிலையில் வைத்திருக்க முடியும். இவ்வாறு செய்தால் மட்டுமே பால் வினியோகத்தில் தாமதத்தை தவிர்க்க முடியும்.

தற்போது காலை 7.30 மணிக்குதான் ஆவினில் இருந்து பால் வினியோகிக்கப்படுகிறது. சில நேரங்களில் 9.30 மணி வரை ஆகி விடுகிறது. இதன்பின்பு பால் முகவர்கள் இந்த பாலை பெற்று சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வினியோகிக்கும் போது மிகவும் தாமதமாகி விடுகிறது.

பால் தாமதமாக வினியோகிக்கும்போது, பால் பாக்கெட்டுகளை கொண்டு வரும் டப்பாக்களை திரும்ப ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராத காரணத்தினாலும் பால் பாக்கெட்டுகளை வாகனத்தில் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

என்னென்ன காரணங்களுக்காக பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது? என்பதை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'ஆவின் பால் தட்டுப்பாடு என எதுவும் இல்லை. சில இடங்களில் ஆவின் பால் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் வந்தன. அதுகுறித்து விசாரணை நடத்தி ஆவின் பால் தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என்றனர்.

Tags:    

Similar News