உள்ளூர் செய்திகள்

கோவையில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற இளம்பெண்

Published On 2023-11-14 08:49 GMT   |   Update On 2023-11-14 08:49 GMT
  • ஆம்புலன்சு ஊழியர்கள் மம்தாவை பரிசோதனை செய்த போது குழந்தையின் தலை வெளியே வந்தது தெரிய வந்தது.
  • ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை,

கோவை நல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மனைவி மம்தா (வயது 29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவருக்கு நேற்று இரவு வீட்டில் இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மம்தா வலியால் துடித்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பிரசவத்துக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சு ஊழியர்கள் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ஆம்புலன்சு ஊழியர்கள் மம்தாவை பரிசோதனை செய்த போது அவர்களுக்கு வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆம்புலன்சு மருத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பைலட் ஜெயக்குமார் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர்.

அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து ஆம்புலன்சு ஊழியர்கள் மம்தாவையும், அவரது குழந்தையையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாய், சேயை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

அவசரம் கருதி ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News