உள்ளூர் செய்திகள்

ஓடும் ரெயிலில் வயிறு வலிப்பதாக அட்டகாசம் செய்த வாலிபர் - டாக்டர்கள் அதிர்ச்சி

Published On 2025-02-03 12:06 IST   |   Update On 2025-02-03 12:06:00 IST
  • கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார்.
  • சக பயணிகள் பரிதாபப்பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.

அரக்கோணம்:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீராஜ்குமார். இவர் பெங்களூரு செல்வதற்காக பீகாரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

ரெயில் பெரம்பூர் வந்த போது அவருக்கு பல்வலி ஏற்பட்டது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள். வயிறு வலி என கூறினால் உடனடி சிகிச்சை கிடைக்கும் என நினைத்தார்.

தனக்கு கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார். வலி தாங்க முடியாதவர் போல் நடித்து அட்டகாசம் செய்தார். சக பயணிகள் பரிதாப பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.

மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே நிலைய மேலாளர் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனை டாக்டர்கள், உதவியாளர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை என குழுக்களாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

ரெயிலில் பயணம் செய்பவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி நடைமேடை 1-ல் அனுமதித்து ரெயிலை நிறுத்தினர்.

தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நீராஜ்குமாரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் நீராஜ் குமார் வயிற்றை காண்பிக்காமல் வாயை திறந்து பல்வலி என கூறினார்.

இதனை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயிற்று வலிக்கான மாத்திரை மருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் பல் வலி என கூறியதால் ரெயில்வே டாக்டர்கள் கடிந்து கொண்டனர். பல் வலிக்கான மாத்திரையை வழங்கினர்.

மேலும் அந்த நபரை இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனால் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News