உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிளை திருடி உரிமையாளரிடமே உதவி கேட்ட வாலிபர்

Published On 2022-08-18 09:50 GMT   |   Update On 2022-08-18 09:50 GMT
  • பொதுமக்களும் வாலிபரை சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர்.
  • கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணி யாற்றி வருகிறார்.

 சூலூர்:

சூலூர் அருகே ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 37). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணி யாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். திடீரென அந்த மோட்டார்சைக்கிள் மாயமானது. இதுபற்றி அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். குரும்ப பாளையம் வழியாகச் சென்றபோது ஒரு கடை முன்பு திருடு போன அவரது மோட்டார்சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. வாலிபர் ஒருவர் முருகனிடம் வந்து தனது மோட்டார்சைக்கிள் ரிப்பேர் ஆகி விட்டது, ஒர்க்‌ஷாப் எப்போது திறப்பார்கள் என்று கேட்டார்.

இதை கேட்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். தனது மோட்டார்சைக்கிளையே திருடி வந்து விட்டு தன்னிடமே அதனை ரிப்பேர் பார்க்க உதவி கேட்கிறானே என்று எண்ணிய அவர் வாலிபரை மடக்கி பிடித்தார்.

2 பேரும் தகராறில் ஈடுபடுவதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

முருகன் தனது மோட்டார்சைக்கிள் திருட்டு போனதையும், அதனை திருடிச் சென்றவன் சிக்கிக் கொண்ட விவரத்தையும் தெரிவித்தார்.

உடனே பொதுமக்களும் வாலிபரை சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் (30), தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பாலசுப்பிரமணியன் மீது பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன.

Tags:    

Similar News